Wednesday, December 5, 2012

நீயா ? நானா ? போட்டியில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சங்க ஒழுங்கை!

கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை, 57வது ஒழுங்கையில் கொழும்பு தமிழ் சங்கம் உள்ளது. மன்னர்கள், புலவர்கள் காலத்திலே சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டதால் "தமிழ் சங்கம்" என்ற வார்த்தைக்கு ஒரு புனிதத் தன்மை உண்டு. அந்த புனிதத்தை உணர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் வேலணை வேணியன் கொழும்பில் அது அமைந்துள்ள 57வது ஒழுங்கையை தமிழ் சங்க ஒழுங்கை என பெயர் மாற்றம் செய்ய யோசனை முன்வைத்தார். இந்த யோசனை கைகூடி வந்தவேளை பேரினவாத சதிகாரர்களால் அதற்கு முட்டுக்கட்டை இடப்பட்டுள்ளது.


இந்த முட்டுக்கட்டையை உடைத்தெறிய ஜனாநாயக மக்கள் முன்னணி கட்சி, மேல் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சிங்கள தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை செய்ய முடிவு செய்தது. இந்த பேச்சுவார்த்தைக்கான ஒழுங்குகள் செய்யப்படுகிறன்ற நிலையில் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.


அதுதான் அரசியல்வாதிகளின் இருக்கை பிரச்சினை. தமிழ் சங்க ஒழுங்கை பெயர் மாற்ற வரலாற்றிற்கு காரணம் நீயா? நானா? என்ற போட்டியே அது. தமிழ் சங்க ஒழுங்கை பெயர் மாற்ற பிரச்சினை தமிழா - சிங்களமா என்ற நிலையில் இருந்து தற்போது மனோவா - பிரபாவா என்ற நிலைக்கு மாறியுள்ளது. தமிழ் சங்க ஒழுங்கை குறித்து பேச்சுவார்த்தையை முதலமைச்சர் கூட்டினார். இதன்போது 'தேவையற்ற அரசியலை தவிர்க்கும் நோக்கிலும், சுகவீனம் காரணமாகவும் நான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை' என மனோ கணேசன் அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் அக்கூட்டத்தில் மேல் மாகாண முதலமைச்சரும் மொழி அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்து கொள்ளவில்லை. எனினும் 'ஒற்றுமையாக செயற்பட்டிருப்பின் இதற்காக கூட்டப்பட்ட கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது' என பிரபா கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கூட்டத்தை தானே ஏற்பாடு செய்ததாக மாகாணசபை உறுப்பினர் ராஜேந்திரன் எந்த அறிக்கையிலும் கூறவில்லை. ஆனால் 1ஆம் திகதி இணைய தளங்களில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டதாக பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 'மேல்மாகாணசபை முதலமைச்சரிடம் நான் ஏற்கனவே இது தொடர்பாகக உரையாடியிருந்தேன். அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது விண்ணப்பத்திற்கமைய இப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என உறுதியளித்துள்ளார். நான் மட்டுமே இன்று கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்.' என பிரபா தம்பட்டம் அடித்தும் கொண்டார்.

இதற்கு பதிலறிக்கை விடுத்துள்ள மேல்மாகாணசபை உறுப்பினருமான எஸ். ராஜேந்திரன், 'கலந்தாலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்த மேல்மாகாணசபை முதலமைச்சரை கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்தி, கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை விவகாரத்தை குரோத உணர்வுடன் மென்மேலும் குழப்பி கீழ்த்தரமான அரசியல் செய்ய வேண்டாம் என தமிழினத்தின் பெயரால் இவரை நான் மிகுந்த நல்லெண்ணத்துடன் கேட்டுகொள்கிறேன்' என கூறியுள்ளார். 'நேற்று நடைபெற்ற கூட்டம் முதலைமைச்சர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால்தான் அது முதலைமைச்சர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. நாம் ஏற்பாடு செய்திருந்தால் அது எமது கட்சி அலுவலகத்தில் அல்லவா நடத்தப்பட்டிருக்கும்? இந்த சிறு விடயம்கூட பிரபா கணேசனுக்கு புரியவில்லை' என்று சாடியுள்ளார்.

பிரபா கணேசன் - மனோ கணேசன் கட்சியில் இருந்து பிரிந்தது தொடக்கம் இந்த விமர்சனப்போர் களம்கண்டு வருகிறது. அது தனிப்பட்ட ரீதியில் இருந்தால் பிரச்சினை இல்லை. மூன்றாம் மனிதர் தலையீடு இருக்காது. ஆனால் பொதுப் பிரச்சினையிலும் அது விஸ்வரூபம் எடுத்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

உண்மையில் பிரச்சினை தமிழ் சங்க ஒழுங்கை சம்பந்தப்பட்டது. ஆனால் இன்று பிரச்சினை மறுவடிவம் எடுத்துள்ளது. நீயா? நானா? என்ற போட்டி வலுப்பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் கால்களில் மண்டியிட்டு வாக்குகளை பெற்று சிம்மாசனம் ஏறியவர்கள்தான் அவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்றனர். மக்களின் ஒற்றுமைக்கு உதாரண புருஷர்களாக திகழவேண்டிய இவர்கள் ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பி முட்டி மோதிக்கொள்வதில் என்ன பயன்?

இரத்த வரலாற்றுக்கு உரித்தான தமிழினம் ஏன் அந்த நிலைக்கு சென்றது என்பது நாம் நன்கு அறிந்ததே. காட்டிக்கொடுப்பவர்கள் இரத்த வரலாற்றை எமக்கு உரித்தாக்கினர்.

கொழும்பு தமிழ் சங்கம் அமைந்துள்ள 57வது ஒழுங்கை 57வது ஒழுங்கையாகவே இருந்துவிடட்டும். அதனை பெயர் மாற்றுவதாகக் கூறிக் கொண்டு ஊடகவியலாளர் வேலணை வேணியனின் பெயரையும் கெடுத்துக் கொண்டு எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

நாய் குறைத்தால், "சூரியனை பார்த்து நாய் குறைத்தால் யாருக்கு வாய் வலிக்கும்' என்று சொல்லிவிட்டு ஒரு தரப்பு தன் பயணத்தை தொடரலாம். அதைவிடுத்து நாயின் பின்னே சென்று குறைத்துக் கொண்டிருந்தால் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். வரலாற்றில் தமிழ் தலைவர்களின் ஒற்றுமையின்மையால் நாடற்று தமிழர்கள் அகதிகளால் நாய் போல் திரிந்து கொண்டிருப்பது போதும். உள்ளவர்களாவது தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். அதற்காக மற்றையவர்களுக்கு அடிப்பணிந்து இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதை மனதில் கொள்ளவும்.

*என்னுடைய கருத்துக்கள் யாருக்கும் சேறு பூசுவதற்கான நோக்கம் கொண்டதல்ல..

முக்கிய குறிப்பு :- இந்த ஆக்கம் என்னுடையதல்ல, பேஸ்புக் நண்பர் ஒருவர் எனது பிளக்கர் வாசகராக இருந்திருக்கிறார். அவர் பேஸ்புக்கில் என்னை தொடர்பு கொண்டு தனது இந்த ஆக்கத்தை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டார். காலத்தின் தேவை கருத்தி இவ் ஆக்கத்தை என் பிளக்கரின் ஊடே வெளியுலகிற்கு கொண்டுவருகிறேன்.

முகமறியா அந்த நண்பருக்கு என்சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும் நன்றி.

8 comments:

 1. அடங்கொன்னியா.. இதுல இவ்ளோ மேட்டரா..... கலை.. நீங்க எதாவது பத்திரிக்கைல வேலை பாக்குறிங்களா????

  ReplyDelete
  Replies
  1. இப்படி இன்னும் நிறைய விடயங்கள் இருக்கு

   Delete
 2. நீயா நானா என்பது பிரச்சனை ஒன்று வரும்போதுதானே எழும்...
  பிரச்சனை இருக்கும் போதுதான் நீ நான் என்று தம்பட்டம் அடிக்கலாம்..
  இது தம்பட்டம் அடிக்கும் சீசன் போல....

  ReplyDelete
  Replies
  1. அரசியலில் தம்பட்டம் இல்லாமல் வேற எண்ண இருக்க முடியும்

   Delete
 3. வணக்கம் கலைவிழி!நீண்ட நாட்களின் பின் வாசகரின் கருத்துடன் வந்த பதிவில் சந்திப்பதில் சந்தோஸ்ம்!

  ReplyDelete
 4. போட்டி அரசியலும் அதுவும் பிரபா மனோவிடம் இருந்து பிரிந்த பின் நடக்கும் போட்டி அறிக்கைக்கள் என ஓழுங்கையும் அரசியலில் இப்படிச் சீரழிகின்றது.இப்படி தெரு அரசியலில் நாறுவதைவிட 57 லேன் என்று இருப்பதே மேல்!

  ReplyDelete
 5. அரசியல் விடயய்களில் நல்ல கருத்துக்கள் தரும் வாசகர்களின் பதிவை தொடர்ந்து பிளாக்கில் எதிர்பார்க்கின்றேன்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்து பகிர்விற்கும்

   Delete