Tuesday, October 2, 2012

சரித்திடம் படைக்கத் துடிக்கும் மொட்டுக்களை கருக்காதீர்கள்!

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இன்று சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினம் என்பது யாவரும் அறிந்த ஒன்று. எனினும் இவ் வயதினருக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி பலர் கருத்திற் கொள்வதில்லை. முக்கிய பெரும் சொத்துக்களின் தினமாக இன்றைய நாள் அமையப் பெற்றிருக்கிறது. இருப்பினும் இன்றைய சிறுவர்கள் எதிர்கால தலைவர்கள். எனவே சிறுவர்கள், அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் பேசலாம். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் நிறைவான மனிதன் எனும் கட்டிடத்தின் அஸ்திவாரமாக அவனது இளமைக்காலம் அமைகிறது. அந்தக் காலத்தில் அவன் பெறும் கல்வி, அனுபவம், சிந்தனைகள் எல்லாம் எதிர்கால அறுவடைக்காய் விதைக்கப் பெற்ற நாற்றுக்கள்.

சிறுவர் உரிமை குறித்த சமவாயத்தில் 18 வயதிற்குட்பட்ட அனைத்து மனிதப் பிறவிகளும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ் வரையறை நாடுகளிற்கு நாடு வேறுபடும். இலங்கையைப் பொறுத்தவரையில் தண்டணைச் சட்டக்கோவை, பராமரிப்புச் சட்டம், தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபைச் சட்டம் என்பன ஒருங்கே 18 வயதிற்குட்பட்ட அனைவரையும் சிறுவர்கள் என குறிப்பிடுகிறது. எனினும் சிறுவர் தொழிற்சாலைக் கட்டளைச் சட்டம், சிறுவர் இளம்பராயத்தினர் கட்டளைச் சட்டம் முதலியன 14 வயதிற்குட்பட்டோரை சிறுவர்கள் என குறிப்பிடுகிறது. இவற்றின் படி பொதுவாக 18 வயதிற்குட்பட்டோரை சிறுவர்கள் என கருதலாம்.


இங்கையில் 6,163,000 சிறுவர்கள் உள்ளனர் என கணிப்பிடப்பட்டுள்ளது.  சிறுவர் தொழிற்சாலைக் கட்டளைச் சட்டம், சிறுவர் இளம்பராயத்தினர் கட்டளைச் சட்டங்களின் படி 14 வயதிற்குட்பட்டோரை வேலைக்கு அமர்த்துதலே குற்றமாகக் கருதப்படும். இவ் ஒரு விடயம் தொடர்பிலேயே வேறுபாடு காணப்படுகிறது. சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு யூன் மாதம் 12ஆம் திகதியை சிறுவர்தொழிலாளர்களுக்கு எதிரான தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடணப்படுத்தியுள்ளது.

சிறுவர்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள், உரிமைகள் மற்றும் உரித்துடைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.எனினும் அவை மக்களை முறையாக சென்றடையவில்லை. இதன் காரணமாகவே இலங்கை போன்ற ஆசிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையினால் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி சிறுவர் உரிமைப் பிரகடனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இலங்கை 1991ஆம் ஆண்டு இணைந்து கொண்டு சிறுவர் உரிமைப் பட்டயத்தை ஏற்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைப் பிரகடனத்தின் படி ஒரு நாட்டில் உள்ள குழந்தைகள் உயிர்வாழ்வதற்காக அந்நாட்டு அரசாங்கம் அவர்களுக்கு தேவையான சுகாதார - இருப்பிட வசதிகள், சேவைகள், உணவு, குடிநீர் வசதி என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் இவ் நான்கு அடிப்படை அம்சங்களும் பெரும்பாலான பிரதேசங்களில் கேள்விக் குறியாகவே இருக்கிறது.


1991ஆம் ஆண்டின் பின்னதாக இலங்கையில் 1995 இல் சிறுவர்களது நன்மை கருதி 22ம் இலக்கச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகள் என ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள்,
 • வாழ்வதற்கும் முன்னேற்றுவதற்குமான உரிமை.
 • பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளும் உரிமை.
 • பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.
 • பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை.
 • கருத்தை வெளிப்படுத்தும் உரிமை.
 • சிந்திப்பதற்கும், மனச் சாட்சிப்படி நடப்பதற்கும், சமயமொன்றைப் பின்பற்றுவதற்குமான உரிமை.
 • சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை.
 • போதிய கல்வியைப் பெறும் உரிமை.
 • பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை.
 • பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை.
 • சித்திரவதை, குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் உரிமை.
 • சாதாரண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை.
 • சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்குமான உரிமை.சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டனைக்கு உட்படுத்தும் வகையிலும் இச் சீர்திருத்தம் அமையப் பெற்றுள்ளது.இதன்படி கீழ் கண்ட குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டணைகள் நடைமுறையில் உள்ளன. ஆயினும் இக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் சந்திப்பது அரிதாகவே உள்ளது. சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் இதுவரை முறைப்பாடு கிடைப்பது நூற்றுக்கு 25 வீதமாகவே அமையப் பெற்றுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
 •  முறைகேடான உறவுகளில் சிறுவர்களை ஈடுபடுத்தல்.
 •  பன்னிரண்டு வயதிற்கு குறைந்த ஒரு பிள்ளையை கைவிட்டு நிர்க்கதி ஆக்குதல்.
 •   சிறுவர்களை இம்சைப்படுத்துதலும் சித்திரவதை செய்தலும்.
 • சிறுவர் துஷ்பிரயோகமும் கடத்தலும்.
 • பாலியல் வாரியான நடவடிக்கைகளில் சிறுவர், சிறுமியரை ஈடு படுத்தல்.
 • அவர்களை பாலியல் வாரியான சுரண்டலுக்கு உட்படுத்தல்.
 • சிறுவர்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்ற நடவடிக்கைகள்.
 • உறவினர் அல்லது சிறுவர்களைத் தத்தெடுப்போர் சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தல்.
 •  சிறுவர்களுக்கு ஆபாச சஞ்சிகைகளை விற்பனை செய்தலும் ஆபாசப் படங்களைக் காண்பித்தலும்.
 5 வயது முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டாயக் கல்வி இலங்கையில் நடைமுறையில் உள்ளது. இலங்கையில் சிறுவர்களுக்கான கல்வி இலவசமாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள போதும் சிறுவர்கள் பலரும் பாடசாலைகளில் இடைவிலகுகின்றனர். குடும்பச் சூழ்நிலை, வறுமை, போசாக்கின்மை ஆகிய காரணங்களினால் மாணவர்கள் இடைவிலகுகின்றனர்.

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மற்றும் மலையக சிறுவர்கள் வறுமை மற்றும் போசாக்கின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களே இளம் வயதில் வேலைக்கு செல்கின்றனர் அல்லது இடைத்தரகர்கள் மூலமாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். 


இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் சிறுவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்படுவதில்லை. அவர்களுக்கான போசாக்கான உணவு, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி என்பன இதுவரையில் உரியமுறையில் வழங்கப்படுவதில்லை என்பது கண்கூடு. இப்பிரதேச சிறுவர்கள் நோய்த் தாக்கங்களிற்கு உட்பட்டுள்ள அதேவேளை மனரீதியாகவும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.


பாடசாலையில் கல்வி கற்றும் சிறுவர்களுக்கு போசாக்குணவு வழங்கும் நடைமுறை நாடலாவிய ரீதியில் 2007ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. உணவு வழங்கல் தொடர்பான நடைமுறை மாகாணங்களின் அடிப்படையுல் வெறுபடுகிறது. மலையக சிறுவர்களின் போசாக்கின்மையை கருத்திற் கொண்டு அம் மாணவர்களுக்கு பால் மற்றும் முட்டை வழங்குவதாக அரசு இவ்வருட ஆரம்ப காலப்பகுதியில் அறிவித்திருந்தது. எனினும் இரண்டொரு தினங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட அச் செயற்றிட்டம் உரிய வகையில் சிறுவர்களுக்கு பயன்தரவில்லை. 

18 வயதிற்குட்பட்ட ஆண், பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இலங்கையின் அண்மைய தகவலின் அடிப்படையில் பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிறுவர்கள் மனரீதியாக பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர்.


சிறுவர் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் சிறுவர்களும் போசாக்கு மற்றும் உடல் உள ரீதியான தாக்கங்களிற்கு முகங் கொடுக்கின்றனர். பாடசாலைச் சிறுவர்களுக்கு உடல் சார்ந்த தண்டனையளித்தல், கல்வியமைச்சின் 2005ஆம் ஆண்டு17ம் இலக்க சுற்றுநிருபம் படி குற்றமாக கருதப்படுகிறது.

பெற்றோர், உறவினர், அயலவர், சமூகம் என்பன ஒவ்வோர் சிறுவர்கள் மீதும் தமக்கான பொறுப்புக்களை உணராத வரையில் சிறுவர்கள் தொடர்பான சட்டங்கள், பிரகடனங்கள் என எத்தனை இருந்தாலும் அவை அனைத்தும் வெறும் செல்லாக் காசுகளே. 

வளமுள்ள, பெறுப்புமிக்க எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்காக இன்றைய சிறுவர்களை நல்வழிப்படுத்தி அவர்களது உரிமைகளை வழங்கி அவர்களுக்கு சுதந்திர உலகத்தை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மனிதப் பிறவி எடுத்துள்ள அனைவரதும் கடமை என்பதை நினைவூட்டுகிறேன்.8 comments:

 1. விக்கிபீடியா மாதிரி எவ்ளோ தகவல்கள்....
  குழந்தைகளுக்குகான நல்வழிப்படுத்தல் நம்மிடமிருந்தே ஆரம்பிக்கட்டும்......

  ReplyDelete
 2. தகவல்களுடன் கூடிய நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்........

  ReplyDelete
  Replies
  1. நன்றி தாமரைக்குட்டி தங்கள் வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும்.

   Delete
 3. மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்துக்கள்.முளைகளை கருக்கிவிட்டு விளைச்சலை என்றும் எதிர்பார்க்கமுடியாது.சமூக வாழ்வியலில் ஒவ்வொரு தனி நபரும் சமூகத்தின் விழுதுகளை காக்க வேண்டிய கடப்பாட்டினை சுமந்தவர்களே.இதுபோன்ற சமூகம் சார்பதிவுகளையாவது நீங்கள் அதிகமாக எழுதுங்களேன்

  ReplyDelete
  Replies
  1. நிறையவே எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது தான். நேரம் பொறுப்புக்கள் ஆர்வத்தினையும் விருப்புக்களினையும் விட அதிகமாகவெ இருக்கின்றன. நிச்சயமாக முயற்சி செய்கிறேன்.

   Delete
 4. மிகவும் அவசியமான பதிவு தற்காலத்தில் சிறுவர் உரிமை மீறல்கள் நம்நாட்டில் அதிகரித்துக் காணப்படுகிறது என்பது கவலைக்குறிய விடயம் :( சிறுவர்கள் தினத்தன்று கூட மட்டக்களப்பில் ஒரு சிறு மொட்டு துண்ண்டு துண்டாக வெட்டப்பட்டு கருகியுள்ளது....

  சிறுவர்கள் மீது இவ்வளவு வக்கிரமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எப்படித்தான் மனது வருகிறதோ...:(

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் மூஸா, சிறுவர்களை துன்புறுத்துபவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது.

   Delete
 5. ஆம் குழந்தைகளுடன் தொடர்புடையலர்கள் உணர வேண்டியது. "பெற்றோர், உறவினர், அயலவர், சமூகம் என்பன ஒவ்வோர் சிறுவர்கள் மீதும் தமக்கான பொறுப்புக்களை உணராத வரையில் சிறுவர்கள் தொடர்பான சட்டங்கள், பிரகடனங்கள் என எத்தனை இருந்தாலும் அவை அனைத்தும் வெறும் செல்லாக் காசுகளே."

  ReplyDelete