Monday, June 10, 2013

உயிர் இருக்க உடலை அரிக்கும் புற்றுநோய்: இலங்கை மக்களின் நிலை என்ன ?

யுவராஜ் சிங், ஆஞ்சலினாஜோலி, மனிஷா கொய்ராலா என கிரிக்கெட், சினிமா, உலக தலைவர்கள்  பிரபல்யங்களுக்கு புற்றுநோய் என்றதும் நாம் ஒருகணம் இனந்தெரியாத துன்பத்துக்குள் தள்ளப்படுகிறோம். விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். ஆனால் எமது பக்கத்து வீட்டில், பக்கத்து தெருவில் என்று ஆறு மாத குழந்தை முதல் 60,70 வயது முதியவர் வரை புற்றுநோயினால் அரிக்கப்படுக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்தவர்களை விடுங்கள், குழந்தைகள் செய்த பிழை, பாவம்தான் என்ன ? அவர்களுக்காக நாம் ஒரு நொடியை ஏனும் செலவழித்திருக்கிறோமா ?


மனித உடலையும், மனைதையும் புற்று புற்றாய் அரித்து அழிக்கும் புற்றுநோய், தலைமுதல் கால்வரை உடலின் எந்தப் பாகத்தையும் தாக்கக் கூடியது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புற்று நோயில் இரண்டு பிரிவுகள் உண்டு, ஒன்று ஒரே இடத்தில் இருப்பது, மற்றொன்று உடலெல்லாம் பரவுவது. ஓரிடத்தில் இருக்கும் புற்று நோயை விரைவில் குணப்படுத்திவிடலாம். உதாரணமாக மார்பக புற்று நோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவதன் மூலம் புற்று நோய்த் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம். ஆனால் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளை அவ்வாறு பிரித்து விடுவது எளிதானது அல்ல. 

நகம் மற்றும் முடியைத்தவிர மனித உடலில் எங்கு வேண்டுமானாலும் வரக்கூடிய புற்றுநோய் ஒன்றல்ல, இரண்டல்ல  100 வகைகளாக பிரித்து தனது கோரத்தை வெளிப்படுத்துகிறது. புற்றுநோய் காரணமாக ஒவ்வொரு வருடமும் 76 லட்சம் பேர் மரணிப்பதாக என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு உயிரிழப்பவர்களில் 70 சதவீதமானவர்கள் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.புற்றுநோய் அறிகுறியை ஆரம்பத்திலேயே கண்டறியும் பட்சத்தில் நோய்த் தாக்கத்தை 40 சதவீதம் தடுக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். புற்றுநோயை முற்று முழுதாக குணப்படுத்தியதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரணமாக அந்தநோய் மேலும் வீரியமடையாது இருப்பதற்காகவும் வாழ்நாளை நீடிப்பதற்குமாகவே சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஹீமோதெராபி மற்றும் சத்திரசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

கதிர்வீச்சு சிகிச்சை

புற்று நோய் செல்களை சராசரி செல்களில் இருந்து மிக எளிதாக கண்டறிய முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள புற்று நோய் செல்களை கதிர்வீச்சு மூலம் தாக்கி அழிக்க முடியும். கதிர்வீச்சு மூலம் அழிந்த செல்கள் திரும்பி வளருவது கடினம்.

ஹீமோ தெரப்பி

மிக வேகமாக வளரும் செல்களை கீமோ தெரப்பி மூலம் கட்டுப்படுத்த முடியும். உடம்பில் பல்வேறு இடங்களில் உள்ள புற்று நோய் செல்களை கீமோ தெரப்பி மருந்து தாக்கி அழிக்கிறது. மற்றும் மேலும் பரவாமல் தடுக்கிறது. கீமோ தெரப்பி மருந்து ஊசி மூலமாக உடம்பில் செலுத்தப்படும் அல்லது மாத்திரைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம். 


இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த வருடத்தில் (2012) மட்டும் 20,000 புதிய புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 2011ஆம் அண்டில் 15,000 புதிய புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. இலங்கை சனத்தொகையில் 8 வீதமானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த வருடம் இனங்காணப்பட்ட புற்றுநோயாளர்களில் அதிகமானவர்கள் நோயினால் அதிகளவில் காவு கொள்ளப்பட்டுவிட்டனர். ஆரம்பகட்ட நிலையை தாண்டிய பின்னரே இவர்கள் மருத்துவ சேவையை நாடியுள்ளனர். இலங்கையில் 10 வகையான புற்றுநோய்கள் உள்ளன. 

புற்றுநோய் சிகிச்சை என்றால் அனைவரது நினைவுக்கும் வருவது மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைதான். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 2012ஆம் ஆண்டு தகவல்களின் படி, ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 800 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெறுகின்றனர். இதேவேளை நாளொன்றில் 900 புற்றுநோயாளர்கள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக வடக்கு, கிழக்கு மக்களின் நோய் உக்கிரத்தை தணிப்பதில் யாழ். போதனா வைத்தியசாலை பெரும் பங்களிக்கிறது. யாழ்ப்பாணம், தீவகம், வவுனியா, கிழக்கு மாகாணம் என அனைவரும் இவ் வைத்தியசாலையில்தான் மேலதிக சிகிச்சைகளை பெறுகின்றனர். 

இவர்களுக்கான சிகிச்சையை யாழ் போதனா வைத்தியசாலையில் சிறப்பாக வைத்திய நிபுணர் டொக்டர். ஜெயக்குமரன் வழக்கிவந்தார். யாழில் புற்றுநோய் சிகிச்சைகள் தெல்லிப்பழை மற்றும் சாவகச்சேரியிலும் வழங்கப்படுகிறது. இதற்கான முயற்சிகளை இவரே முன்னெடுத்தார். தனது கடமைக்கு மேலதிகமாக மாதம் ஒருமுறை வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ள புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவார். அங்கு ஒருமுறை 150இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பயன்பெற்றனர். 

ஆனால் டொக்டர். ஜெயக்குமரனை இப்போது யாழ். வைத்தியசாலையில் காணமுடிவதில்லை. கண்டிக்கு இடமாற்றம் பெற்றதாக அறியமுடிகிறது. வைத்தியசாலை உள்ளக பிரச்சினைகளினால் இந்த மாற்றம் வலிந்து கிடைத்திருக்கிறது. எதுஎவ்வாறானாலும் வடக்கு, கிழக்கு தமிழ் புற்றுநோயாளர்களுக்கான ஆயுள் மேலும் குறைவடைகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

டொக்டர். ஜெயக்குமரனை வடக்கு கைவிட்டது தமிழ் மக்களுக்கு, புற்றுநோயாளர்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். வடக்கு கிழக்கு புற்றுநோயாளர்களின் மருந்தாக விளங்கிய வைத்தியர் தற்போது வடக்கு மக்கள் உள்ள நிலையில் வெளிமாவட்டத்தில் பணிபுரிவதென்பது  சிகிச்சை என்றாலும், வள ரீதியாகவும் பின்னோக்கிய ஒரு பயணிப்பாகவே அமையும்.
புற்றுநோய் சிகிச்சைகளுக்காக கடந்த 2012ஆம் ஆண்டில் 2000 மில்லியன் ரூபாய்களை செலவித்ததாக அரசு கணக்கு சொல்கிறது. ஆனால் கடந்த ஆண்டும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு நிலவியதாக வைத்தியசாலையின் பணிப்பாளரே தெரிவித்திருந்தார். இவ்வாண்டு ஏற்பட்ட மருந்து தட்டுப்பாட்டை வைத்தியசாலை வட்டாரங்கள் ஏற்க மறுத்து விட்டன. 

ஆனாலும்  மஹரகம வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. மஹரகம வைத்தியசாலைக்கே இந்த நிலை என்றால் யாழ் வைத்தியசாலையைப் பற்றி கூறத்தேவையில்லை. யாழ். போதனா வைத்தியசாலையிலும் புற்றுநோய்க்கான மருந்து தட்டுப்பாடு பெரும் அளவில் நிலவப்பெற்றன. இந்த வருட ஆரம்பம் முதலே மருந்து தட்டுப்பாடு இருந்தது. மருந்து கிடைத்ததும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வதற்கு இது ஒன்றும் சாதாரண தடிமன் அல்லவே. உயிர் கொள்ளிகளில் ஒன்று.

இதனால் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்கள், தனியார் மருந்தகங்களில் மருந்தை பெற்று வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். புற்றுநோய்க்கான மருந்து ஒன்று 250 ரூபா தொடக்கம் மூன்று லட்சம் ரூபா வரையில் இலங்கையில் உள்ளது. இது இவ்வாறு இருக்க வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களால் எவ்வாறு இவ்வளவு பெருந்தொகை கொடுத்து ஒரு தடவைக்கான, அல்லது ஒரு மாதத்திற்கான மருந்தை வாங்க முடியும். இலங்கையில் ஹீமோ தெரப்பி மருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை நோயாளிக்கு செலுத்தப்படுகிறது. 

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் வசதி படைத்த மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைத்தியசாலையில் வழங்கும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதில்லை. இங்கு வழங்கும் மருந்தினைவிட சிறந்த மருந்தினை தனியார் நிறுவனங்களில் வழங்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர். புற்றுநோயக்கான மருந்து ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இலங்கை பெற்றுக் கொள்கிறது. 

இதனைவிட சில தனவான்கள் தனியார் நிறுவனங்களில் புற்றுநோய் மருந்துப் பொருட்களைப் நோயாளிகளுக்கு பெற்றுக் கொடுக்கின்றனர். சிலர் குறிப்பிட்டளவு பணத்தை வழங்கி நேரடியாக வைத்தியசாலையின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
இந்நிலையிலும் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக 150 கோடி ரூபா செலவில் மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அப்படியாயின் உண்மை நிலை என்ன ?

புற்றுநோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சு டென்டர் முறையிலே கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளது. இதன்போது தனியார் நிறுவனங்களில் அதிக பணம் கொடுத்து மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது மருந்து கொள்வனவை அரசு கைவிட்டுள்ளது. இவ்வாண்டு புற்றுநோயாளர்களுக்கான மருந்து தட்டுப்பாட்டிற்கு இதுவே பிரதான காரணமாக உள்ளது.

இலங்கையில் சிறந்த பயனை வழக்கிய இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவசேவை தற்போது பெயரளவில் மட்டுமே. இலவச சேவையாக உள்ளது. சிலருக்கு அரிதாக கிடைக்கும் இலவச சேவைகளும், சேவையாளர்களின் மனசாட்சிக்கு ஏற்ப வழங்கப்படுகிறதா என்பது ஐயமாகவே இருக்கிறது.


4 comments:

 1. அருமையான பதிவு,,,//// ஆனாலும் ஒன் று சொல்லவேண்டும் யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் பணியற்றும் உழியர்களும் கடமையில் ஈடுபட்டு உள்ளவர்களும் நல்ல முறையில் நோயாளர்களை பராமரிக்கிறார்களா ?????

  ReplyDelete
 2. பதிவு அருமை தோழி மிக வேதனையான விடயம் .........வைத்தியாின் இடமாற்றம்

  ReplyDelete
 3. சிந்திக்கவேண்டிய ஆளும் வர்க்கம் சிந்திக்குமா என்பதே???

  ReplyDelete
 4. எங்கப்பா இவ்ளோ தகவல்கள் எடுக்கறிங்க... ? அருமையான அவசியப்பதிவு...

  ReplyDelete