Wednesday, July 4, 2012

கைக் குழந்தையையும் காமத்துடன் பார்க்கும் அரக்கர்கள்: கருவறையில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு!

இலங்கை மக்களிடத்தில் மனிதம் மரணித்து விட்டது என புலம்பத்தான் முடிகிறது. நிகழ்கால நிதர்சனங்கள் அப்படி இருக்கிறது. அன்பு, பாசம், ஒற்றுமை, சகோதரத்துவம் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அந்த கோர சம்பவம் பதிவாகியிருக்காது.

கூட்டுக் குடும்பம் சிதறி, தனித் தனி குடும்பங்கள் உருவாகி இன்று உருக்குலைந்து போகின்றன. சிறுவர்களை வழிநடத்தக் கூடிய முதியவர்கள் அவர்களுடன் இல்லை. தாய் தந்தை இருவரும் பொருளாதாரத்தை கவனிப்பதை தமது நேரத்தை செலவளிக்கின்றனர்.பிள்ளைகளது சிந்தனைகள் எப்படி இருக்கின்றன அவர்கள் போகும் வழி சரியானதா ? தவறானதா ? என்று அவதானிக்க கூட பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. தனிமையும் தீய பழக்கவழக்கங்களாலும் பிள்ளைகள் செய்யும் செயல்கள் எல்லை மீறிப் போகவே பெற்றோர்கள் கலங்குகின்றனர்.

மறுபுறமாக தீய அரக்கர்களுக்கு இரையாகும் விளக்கம் தெரியாத பிஞ்சு உள்ளங்களை எண்ணும் போது மனம் கணத்துப் போகிறது. வயதுக்கு வந்த இளம் பெண் பிள்ளைகளை தனியே வெளியில் அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுவர்.

ஆனால் தற்காலத்தில் ஆரம்ப பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை கூட வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பாக இருக்கும் என எண்ணி வயதான ஒருவருடன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்தால் அவராலேயே அந்த குழந்தை பாதிக்கப்படுவது என்னவென்று சொல்வது. வேலியே பயிரை மேய்ந்தால் பாதுகாப்பு யார் தருவாரோ?

கடந்த சனிக் கிழமை கொழும்பில் இடம்பெற்ற பரிதாப சம்பவம் கொழும்பு மக்களை மட்டுமன்றி இலங்கையில் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொழும்பு கிருலப்பணையில் ஆறு வயது மட்டுமேயான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் வாயக்காலில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமே அது. சம்பவத்தை பெரும்பான்மையான மக்கள் அறியாமல் இல்லை.

தமிழ் மற்றும் சிங்கள மக்கள் வாழும் கிருலப்பணை பகுதி கொழும்பில் அமைதியான இடமாகவே இதுவரை இருந்து வந்தது. அங்கு வாழும் பெரும்பான்மையானவர்கள் கலப்பு திருமணம் புரிந்தவர்கள். உயிரிழந்த சிறுமியின் தாயும் தந்தையும் கூட கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களே. தயார் சிங்களவர். தந்தையார் தமிழர்.


கிருஷ்ணகுமார் துஷாந்தினி

படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் துஷாந்தினியின் புகைப்படத்தை பார்க்கும் போதே தெரிகிறது மழழை முகம் மறாத குழந்தை. இந்த விளையாட்டுப் பிள்ளையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்வதற்கு அந்த அரக்கர்களுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ தெரியவில்லை.
 
இதற்கு முன்னதாக சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறாமல் இல்லை. அவற்றையெல்லம் இந்தச் சிறுமியின் சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

 அந்த அழகிய குட்டி தேவதை கால்வாயிலிருந்து தூக்கப்படும் காட்சி


இந்த ஏழு வயது சிறுமியின் சம்பவத்தினால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு முன்னதாக நேற்றைய தினம் நான்கு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் வெளிவந்திருக்கிறது. ஆரம்ப பள்ளிக்கு செல்லும் சிறுமியை பள்ளிக்கு ஏற்றிக் கொண்டு செல்லும் வான் சாரதியான வயோதிபரே சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகமாக அவர்களுக்கு தெரிந்த நபர்களாலும் உறவினர்களாலுமே இடம்பெறுகின்றன. அண்ணன், மாமா, சித்தப்பா, தாத்தா, அயலவர் என பிள்ளைகள் மற்றும் பெற்றோர் அறிந்த முகங்களினால் அவர்களது வாழ்வு சிதைக்கப்படுகிறது.

பெற்றோர்கள் யார் தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பானவர்கள் என கருதுகிறார்களோ அவர்களாலேயே பிள்ளைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை வேதனையானது.

இலங்கைத் தீவு முழுவதுமாக தினமும் மூன்று பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதியப்படுவதாக பொலிஸ் அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகிறது. பதியப்படுபவையே மூன்று சம்பவங்களாக இருக்கின்றன. பதியப்படாத, பொலிஸில் முறைப்பாடு செய்யப்படாமல் எத்தனை சம்பவங்களோ? என்று என்னும் போது அச்சம் மட்டுமே மிச்சம்.

நாடு முழுவதிலும் சிறுவர்களுக்கு எதிராக நாள் ஒன்றிற்கு மட்டும் 9 துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுவதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஜே வி பியின் மகளீர் பிரிவினர் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அப்படியாயின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக எத்தனை பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுகின்றன?

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையிடுவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலக்கத்திற்கு கடந்த 2011ஆம் அண்டு மட்டும் 44,000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின், சிறுவர் மற்றும் மகளீர் பொலிஸ் பிரிவிற்கு 1611 பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றில் 654 பெண்களுக்கு எதிரான முறைப்பாடுகள்.

இந்நிலையில் பெற்றோர்கள் 24 மணித்தியாலமும் பிள்ளைகளுடன் இருப்பது சாத்தியமற்றது. அல்லது பிள்ளைகளை வீட்டிற்குள்ளேயே பூட்டித் தான் வைக்க முடியுமா? பிள்ளைளுக்கும் வெளியுலகம் தெரிய வேண்டாமா?

இது இப்படி இருக்க சில இடங்களில் பெற்ற பிள்ளையை தந்தையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் கொடுமைகளும்  இடம்பெற்றுள்ளது. அல்லது தாயாரின் இரண்டாவது கணவன், பிள்ளையின் சித்தப்பா முறையானவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்.  

நாட்டில் இப்படியான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் எவை என்று பார்த்தால் எதுவுமில்லை. குற்றவாளிகள் மரியாதையாக அழைத்துச் செல்லப்பட்டு குறுகியதொகை பிணையிலும் சரீர பிணையிலும் விடுதலை ஆகின்றனர்.  அதிக பட்ச தண்டணை வழங்குவது குறைவாகவே உள்ளது. பஸ்களில் பெண்களிடம் சேட்டையில் ஈடுபவர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டணை என சட்டத்தில் உள்ளது. ஆனால் நடைமுறையில் இல்லை. இவ்வாறாக அற்பமான சட்டங்கள் இருந்தாலும் குற்றவாளிகள் இலகுவாக தப்பித்து விடுகின்றனர்.

பாதிக்கப்படும் சிறுவர்களது எதிர்காலம் ஏனைய சிறுவர்களைப் போல் சாதாரணமாக அமைந்து விடுவதில்லை. குறித்த சம்பவங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள், மன உழைச்சல்களில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு காலங்கள் பல உருண்டோடி விடும். இயல்பாக அவர்களது எதிர்காலத்தை தொடரமுடியாத நிலை ஏற்படும்.

பிற்காலங்களில் ஏனையோர்களுடன் சகஜமாக பழக பயப்படுவர். ஏன் பெற்றோரை கண்டே பயந்து நடுங்கக் கூடிய சூழ்நிலை கூட இருக்கும். தாழ்வு மனப்பான்மை, சபையில் தயக்கம் என்பன இவர்களை ஆட்கொள்ளும். இவற்றிலிருந்து விடுபடுவதற்கு அவர்களது பெற்றோர்கள் தான் முயற்சிகளை எடுத்தாக வேண்டும். 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் தற்காலத்தில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்கான எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசிற்கு அறிவுறுத்தல் விடுக்க உள்ளதாகவும் அவ்அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்கால சந்ததியை ஒழுக்கமான சந்ததியாக உருவாக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திடமும் உள்ளது. வீட்டிலுள்ள பெரியவர்கள் ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். சமய அமைப்புக்கள், அறநெறி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் விளிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபபட வேண்டும். அப்போதாவது இத்தகைய குற்றச் செயல்கள் குறைவதற்கு வழிவகுக்கலாம்.


 


23 comments:

 1. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு....:(

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் அனுதாபம் தெரிவிப்பதனால் என்ன நடக்கப் போகிறது மூஸா,உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   Delete
 2. என்ன செய்வது துரோகிகள் வாழும் உலகில் அவைகளும் வாழ இடம் கிடைக்கும் என நினைத்து இவ்வுலகிற்கு வந்து விட்டனவே....:(

  அவசியம் இவ்வாறான விழிப்புனர்வு பதிவுகள் தேவைப்படுகின்றன.

  நிறைய தொண்டு நிறுவனங்கள் விழிப்புனர்வு நடவடிக்கைகளில் இறங்கியுமுள்ளன...காலப்போக்கில் இவ்வாறான சம்பவங்கள் விரைவாக குறையும்

  ReplyDelete
  Replies
  1. உண்மை மூஸா தொண்டு நிறுவனங்களது செயற்பாடுகள் முக்கியம்,

   Delete
 3. மிகுந்த மன வருத்தத்தையும்...!கோபத்தையும் உன்டாக்குகின்றது..!
  மனிதமிருகங்கள் இதை செய்தவர்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஸ் அண்ணா,

   மனிதர்கள் என்ற பட்டியலிலோ மிருகங்கள் என்ற பட்டியிலேயோ இவர்களை உள்ளடக்க கூடாது.

   Delete
 4. மிகவும் வருந்தத்தக்க நிகழ்வுகள். புரிபடாத பாலியல் துாண்டல்கள் அதிகரித்துவிட்ட நிலையில் தொடர்ச்சியாக இவ்வாறான பாலியல் குற்றங்கள் அதிகரிததுச் செல்கின்றன. இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடசாலைகளிலிருந்து பாலியல் அறிவூட்டல் அவசியமாகிறது. அத்தோடு, தனிமனித ஒழுக்கமென்கிற தர்மம் ஒவ்வொரு மனிதனிடமும் மேலோங்க வேண்டும்.

  சட்டங்கள் சீராக வேலை செய்வது மட்டுமல்ல, ஒழுங்கமுமு் மேலோங்கினாலேயே சிறுவர் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறையும். அத்தோடு பாலியல் வன்முறைகளும் கூட!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்.

   பாடசாலைகளில் சிறிதேனும் அடிப்படைக் கல்வி இருக்கென கருதுகிறேன். தனிமனித ஒழுக்கம் இங்கு முக்கியம். தனிமனித ஒழுக்கத்தை சிறுவயதிலிருந்தே பேணுவதற்கான அறிவுறுத்தல்கள் வேண்டும்.

   Delete
 5. Ice Cube theory என்று நினைக்கிறேன், சமூகத்தில் நடக்கும் துஷ்பிரயோக சம்பவங்களில் மூன்றிலொன்று மட்டும் வெளியே தெரிய மற்றையவை அமுங்கி போகின்றன என்று சொல்வார்கள். மேலே அமைச்சர் பெருமக்களால் சொல்லப்பட்டதாக நீங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் புள்ளி விவரங்களும் அவ்வாறனவையாகவே இருக்கக் கூடும்.
  என்னை கேட்டால் சட்டங்களை கடுமையாக்குவது மட்டுமே அரசால் செய்யக் கூடியது. ஓட்டுப் பிழைப்பு அரசுகள் நிச்சயமாக பெரிதும் விழிப்புணர்வு வரக் கூடியளவிற்கு பிரசாரங்கள் செய்து மத, பழமை வாத மக்கள் மனக் கருத்திற்கு எதிரான ஆக்கபூர்வமான எதையும் செய்ய போவதில்லை.
  ஆக மக்களிடையே பாலியல் அறிவின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் தெளிவு படுத்துவது அறிவார்ந்தோரின் கடமையாகும். பொது தளங்களில் மேலும் இவை விவாதிக்கப் பட வேண்டும். அது சிறிய எழுச்சியையும் மாற்றத்தையும் கொண்டு வரலாம்.
  அண்மையில் அமிர்கான் "சத்யமேவ ஜெயதே " நிகழ்ச்சியில் செய்தது ஒரு சிறந்த முன்மாதிரி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்கள் கருத்துக்களிற்கு,

   வௌியுலகிற்கு பதியப்படும் துஷ்பிரயோக சம்பவங்கள் மிகக் குறைவுதான். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவையும் அவ்வாறே. அநேகமாக நமது தமிழ் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் வௌியிடப்படுவதில்லை. சமூகத்தில் குற்றஞ் செய்தவனை தண்டிப்பதை விட பாதிக்கப்பட்ட பிள்ளைகளே நமது சமூகத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நிச்சயமாக தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

   அதற்காக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். எங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் இது சாத்தியமா? விடைகள் தெரிந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. என்ன செய்வது

   Delete
 6. யுத்தமும் நவீனத்துவமும் சாமானியவர்களையும் காமுகர் ஆக்கி மிருகம் போல சிந்திக்க விட்ட நிலையில் இக் காலத்தில் என்ன தடுப்பு நடவடிக்கை செய்தாலும் முதலில் விழிப்புணர்வு கொடுக்கணும் சமுகத்திற்கும் சட்டம் இயற்றுவோருக்கும் இந்தவாரம் ஊடகங்கள் பார்க்கும் நிலையைக்கூட மனம் விரும்புதில்லை எல்லாம் வருவது பிஞ்சு மரணங்கள் சீரழிப்பு !ம்ம்

  ReplyDelete
  Replies
  1. விழிப்புணர்வு முக்கியம்தான். அத்டே சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். ஊடகங்கள் சம்பவத்தை அப்படியே வெளிப்படுத்துவதனை விட பாரிய பொறுப்புள்ளதை உணர வேண்டும்.

   Delete
 7. முதலில் பாலியல்கல்வி முக்கியம் எம் தேசத்துக்கு இல்லை வாக்கு அரசியல் தாண்டிய தலைவன் தேவை நாட்டுக்கு!ம்ம் கரிகாலன் போல!

  ReplyDelete
 8. இரவு வணக்கம்,கலைவிழி!சிந்திக்க வேண்டிய வேளை!இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்னாவது?"செங்கோல்" சரிந்தால் விபரீதங்கள் தான்!

  ReplyDelete
  Replies
  1. கால வணக்கம் ஐயா. இப்பொழுது விபரீதங்களை சந்திப்பது சாதாரண மக்களும், ஒரு வார்த்தை பேச எத்தணிக்கும் ஊடகங்களும்

   Delete
 9. அடிக்கடி தொலைந்து போகிறீர்களே... இருந்தாலும் வருகையின் அழுத்தம் மிகவும் கடிதே...

  தர்சன் அண்ணா சொன்னவையே என் கருத்தும்... குற்றவாளிகள் அகப்பட்டாலும் அவர்கள் ஏதோ ஒரு செல்வாக்கால் நாளை திறந்தவெளியில் சஞ்சரிப்பார்கள்....

  ReplyDelete
  Replies
  1. தொலைஞ்சு போனாலும், நாட்டு நடப்புக்கள் எங்கள் கண்ணுக்குள் இருக்கின்றன. நன்றி சகோதரரே வருகைக்கும், தங்கள் கருத்துக்களுக்கும்

   Delete
 10. அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி அவர்களுக்குமட்டும் பாடசாலைகளில் அறிவுறுத்துவதால் மட்டும் பயனில்லை. பெற்றோர் கவனமெடுக்க வேண்டும். இன்னொரு வகையில் வெளியே பயிரை மேயும் சம்பவங்களே அதிகம் இடம்பெறுவதால் யாரையுமே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமையும் தவிர்க்க முடியாமல் ஏற்படுகிறது. தனி மனித ஒழுக்கம் அற்றுப்போன மற்றும் மனநிலைப் பிறழ்வு ஏற்பட்ட சிலராலேயே இப்படி நடந்துகொள்ள முடிகிறது என நினைக்கிறேன்.

  ReplyDelete
 11. விழிப்புயர்வுப்பதிவு..நிச்சயம் இவ்விடயம் போய்சேர வேண்டும்..இந்த அரக்கர்கள் பலமாக தண்டிக்கப்பட வேண்டும் சொந்தமே..என்ன கொடுமை இது.???பகிர்விறகு நன்றிகள்.
  http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html

  ReplyDelete
 12. பெண்ணை பெற்றவர்கள் விழிப்புடன் இருக்கனும்

  ReplyDelete
 13. விழிப்புணர்வு தரும் சிறப்பான ஆக்கம் அருமை!...
  தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 14. உங்கள் தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகசிறப்பான வடிவமைப்புடன் உங்களுக்கான ஓர் வலைத்திரட்டு.http://www.valaiththirattu.iniyathu.com/

  ReplyDelete