Friday, December 28, 2012

2012இல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்வித் திண்டாட்டம்

கல்வி, பட்டங்கள், மதிப்பு, மனநிறைவான வாழ்கை இவற்றை விருப்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சீரான கல்வி ஒன்று கிடைக்கப்பெறுமாயின் சிறப்பான வாழ்க்கைக்கு ஏற்றவை அனைத்து இயல்பாக கற்றோர் பின்வந்துவிடும். யாழ்ப்பாண வரலாற்றில் கல்விக்கென தனியிடம் உண்டு. யாழ்ப்பாண மக்களின் பிரதான மூலதனம் கல்வி என்றால் மிகையாகாது. இந்த அழிவில்லாத மூலதனத்தைப் பெற யாழ். மாணவர்கள் அன்றும் இன்றும் போராட வேண்டியுள்ளது. 


இலங்கையின் உயர்கல்வி வரலாற்றில் 2012ஆம் ஆண்டு சோதனை மிக்க ஆண்டாகவே பதியப்படுகிறது. கல்விப் பொதுத்தரா உயர்தரம் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இவ்வாண்டில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேபோல் இலங்கையின் உயர்கல்வி குறித்து நம்பிக்கையின்மையை ஏற்படுத்திய ஆண்டாகவும் இவ்வாண்டு விழங்குகிறது.

2012ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் ஆரம்பித்து வைத்த போராட்டம் காரணமாக பூட்டப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கதவுகள் உரிமை கோரி மாணவர்களின் வகுப்பு பகிஸ்கரிப்பு என இன்றும் திறக்கப்படாமல் உள்ளது. இடையிடையே திறக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக நீண்ட கல்விக் காலத்தை இவ்வாண்டு கொண்டிருக்கவில்லை. 

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோரி அனைத்து பல்கலைக்கழகங்க கல்வி சாரா ஊழியர்கள்  பெப்ரவரி மாத இறுதியில் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 


2ஆம் வருட கலைப்பீட மாணவர்களில் சிறப்பு கலை படப்படப்படிப்பிற்கு அதிக மாணவர்களை உள்வாங்கக் கோரி  யாழ். பல்கலையின் கலைப்பீட மாணவர்கள் ஒருவார கால பகிஸ்கரிப்பை  மார்ச் மாத நடுப்பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் சம்பள முரண்பாட்டிற்குத் தீர்வு வழங்கக் கோரி, அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் யூன் மாதம் 06ஆம் திகதி முதல் நாடுதழுவிய ரீதியில் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டம் 21 நாட்கள் நீடித்து யூன் மாதம் 26ஆம் திகதி நிறைவுக்கு வந்தது. 

இந்த பகிஸ்கரிப்பு 50சதவீத வெற்றியைத் தொடர்ந்து இடைநிறுத்திக் கொள்ளப்பட்டாலும் மீண்டும்  சுழற்சி முறையிலான அடையாள உண்ணா விரதப் போராட்டத்தை ஜீன் 22ஆம் திகதி ஆரம்பித்தனர். 


2012ஆம் ஆண்டில் மிக நீண்ட பணி பகிஸ்கரிப்பு போராட்டமாக அகில இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்களது போராட்டத்தை குறிப்பிடலாம். மூன்று மாதங்களை கடந்து 100 நாட்களில் இந்த பணி பகிஸ்கரிப்பு தொடர்ந்தது. ஜீலை 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை ஒக்டோபர்11ஆம் திகதி கைவிடப்பட்டது. 

விரிவுரையார்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடினும்மாணவர்களது நலனை கருத்திற் கொண்டு கடமைக்கு திரும்புவதாக  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் திடீர் அறிவிப்பு விடுத்தது. இந்நிலையில் ஒக்டோபர் 14ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதன்பின்னர் பெருமூச்சுடன் பல்கலைக்கழகம் நோக்கி பயணித்த மாணவர்களுக்கு ஒரு மாதத்தின் பின் மீண்டும் அவர்களது கல்விமேல் அடிவிழுந்தது. 

நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தன்று யாழ். பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. யாழ். பல்கலையில் மாவீரர் தினம் இந்த ஆண்டுதான் முதன்முதலாக அனுஸ்டிக்கப்பட்ட ஒன்று அன்று. ஆனாலும் சில ஒட்டர்களின் உச்ச செயற்பாடு இங்கே வெற்றிபெற்றது. 


இந்த பாதுகாப்பு படையினரின் அத்துமீறலைக் கண்டித்து, மறுநாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது இலங்கை பாதுகாப்பு தரப்பினர் மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் யாழ். பல்கலை மாணவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு 7 பேர் விடுவிக்கப்பட்டு நான்கு பேர் தொடர்ந்தும்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக மாணவர்கள் அறிவித்தனர். கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களுக்கும் தற்போது வெலிக்கந்த சிறையில் புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. முழுமையான புனர்வாழ்வின் பின்னரே மாணவர்கள் விடுதலை செய்யப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய  ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


யாழ். பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு, ஏனைய மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிறது. யாழ். பல்கலை வாயில்கள் அடைக்கப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் கடந்து விட்டது. 

யாழ். பல்கலைக்கழகத்திற்கு பகிஸ்கரிப்பு, வாயில் பூட்டல் ஒன்றும் புதிதில்லை. எனினும் இவ்வாண்டு முன்னிறுத்தப்பட்ட காரணங்கள், சூழ்நிலைகள் வேவ்வேறானவை. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டதன் பின்னரும் கல்விச் சமூகத்தில் மீண்டும் ஒரு திசைதிருப்பலை வலுக்கட்டாயமாக ஏற்படுத்த முற்படும் ஒரு செயற்பாடாகவே சமூக ஆர்வலர்களால் நோக்கப்படுகிறது. 


அன்றும் இன்றும் நான்கு வருடங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்த சரித்திரங்கள் யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் மிகக்குறைவே. 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு கால் வைத்த மாணவர்கள் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனாலும் இன்றுவரை அவர்களது பட்டப்படிப்பு நிறைவடையவில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, பல்கலை கல்விக்கான வயதை கடந்தும் கற்றுவரும் வடக்கு மாணவர்கள், அவர்களது பெற்றோர்களது மனநிலையை சொற்களால் விபரிக்க முடியாது. ஆண்டுகள் கடத்தப்படுவதனால் தமது சிறப்புக் கலையைக் கூட படிக்காது பொதுக் கலையோடு 2012ஆம் ஆண்டில் இறுதிவருடம் படித்துக் கொண்டிருக்கும் பல மாணவர்கள் விலகிச் செல்கின்றனர்.  வீட்டின் பொருளாதார சுமை மற்றும் பெண்கள் தமது திருமண வயதைக் கடந்தும் பயில்தல் இதற்கான காரணங்களாக  அமைகின்றன. பட்டம் பெற்று, சிறந்த தொழில், கௌரவத்துடன் பெற்றோர்களுக்கு ஊண்றுகோள்களாக நிற்க வேண்டிய கல்விச் சமூகம் இன்று கலங்கிப் போய் நிக்கிறது. எல்லோர் மனதிலும் ஒரே கேள்வி எமது பட்டப்படிப்பு நிறைவடைவது எப்போது

இனிமேலும் மாணவர்களை வைத்து அரசியல் நடத்துவதையும், சலுகைகள் அனுபவிப்பதையும், காட்டிக் கொடுத்து தன் சகோதர இரத்தத்தை குடிப்பதையும் நிறுத்தி விட்டு அவர்களது கல்வியை தொடர வழிசெய்ய வேண்டும் என்பது கல்விச் சமூகத்தின் ஏக்கம். 
 

7 comments:

 1. தூரநோக்கு இல்லாத அரசியல் வாதிகளும் தம் சுயபுலம் சுயதேடல் அறியாத மாணவ சமூகமும் சீரழிப்பது என்னவோ காலத்தையும் பெற்றவர்களின் பொருளாதாரத்தையும் தான்.சிந்திக்க வேண்டியவர்கள் சகலரும்!

  ReplyDelete
 2. உயிருக்கு பஞ்சம் பொழைச்ச காலம் போய் கல்விக்கு பஞ்சம் பொழைக்கிற காலம் வந்திருக்கிறது கொடுமைதான்... :(

  ReplyDelete
 3. மிகவும் தெளிவான கண்ணோட்டத்தில் கட்டுரையை எழுதியிருக்கிங்க... ஆளுமையான கட்டுரை......

  ReplyDelete
 4. சொல்லவந்த விடயத்தை தெளிவாகவும்,
  நடுநிலைமையுடனும் எழுதியிருக்கிறீர்கள். எழுத்தின்மீதான உங்களின் தன்னம்பிக்கையும் முதிர்ச்சியும் தெரிகிறது.

  ReplyDelete
 5. 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு கால் வைத்த மாணவர்கள் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்
  ////////////////////////

  நல்ல காமெடிதான் போங்க...
  யாராவது ஒரு பட்டதாரியக் காட்டுங்க பார்ப்போம் சரியாக 4 வருடத்தில் தன் பட்டத்தை முடித்தவரை :(

  ReplyDelete
 6. பல்கலையில் தொழில் செய்வர்களுக்குத்தான் வரிச் சலுகைகள் கூட கிடைக்கிறது அப்படியிருந்தும் இவர்கள் பணிப்பகிஷ்கரிப்புச் செய்வதுவும் வியப்புக்குறியதுதான்
  நல்ல பதிவு

  ReplyDelete
 7. யாழ்ப்பாணத்தின் ஒட்டு மொத்த சராசரி கல்வித்தராதரம் எப்பவோ பாதாளத்துக்கு போயிட்டுது மேடம்...

  யாரோ ஒரிருவர் பெறும் பெறுபெறு தான் இவர்கள் வண்டியை ஓட்டுகிறது

  ReplyDelete