Friday, January 4, 2013

இன அழிப்பு செய்யாதீர்! யாழ். வைத்தியர்களிடம் ஒரு கோரிக்கை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த அவசர உலகில் நோய் இல்லாத மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். இரண்டு வயது குழந்தைக்கும் சலரோகம், புற்றுநோய் ஆட்கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது. 


இலங்கையைப் பொறுத்தவரை வடமாகாணத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம்.  இயற்கை காரணிகள் ஒரு பக்கம் இருக்க செயற்கையான கொடூர யுத்தம், அம்மக்களை மேலும் தலை தூக்க விடாமல் நோய் என்ற அரக்கனை அவர்களுக்கு பரிசளித்துள்ளது. நோயின் தாக்கத்தால் இங்குள்ள மக்கள் வெய்யிலில் தவிக்கும் புளுவாக ஒருபக்கம் நெளிய,  பெருந் திரளான நோயாளர்களுக்கு ஏற்ற மருத்துவ வசதிகள் அங்கு இல்லை என்பது அவர்களை மேலும் சுருட்டி விடுகிறது.

இம்மக்களுக்கு கிடைக்கப் பெறும் குறைந்தளவான வசதிகளை கூட சில முதளைகள் தமது வாய்க்குள் போட்டுக் கொள்வதும், கவனயீனமாக நடப்பதும், தமக்கான வருவாய்களை அதிகரிப்பதற்குமாக கையாள்வது வேதனை தருகிறது. ஆக்கல், அழித்தலை புரியும் கடவுளிற்கு அடுத்த நிலையில் வைத்தியர்களை வைத்து பார்க்கிறோம். அத்தகையவர்கள் தம் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும் என்பதே எந்தவொரு மனிதப் பிறவியின் எதிர்பார்ப்பும் ஆகும். 

இலங்கையில் மொத்தமாக 14 போதனா வைத்தியசாலைகள் இருந்த போதும் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு உள்ள ஒரே ஒரு பொது வைத்தியசாலையாக யாழ். போதனா வைத்தியசாலை காணப்படுகிறது. இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக நோயாளர்கள் அதிகம் சிகிச்சைபெறும் வைத்தியசாலையாக யாழ். போதனா வைத்தியசாலையைச் சொல்லாம். வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளர்களும் இங்குதான் மேலதிக மற்றும் விசேட சிகிச்சைகளுக்காக செல்ல வேண்டும்.


நிலமை இவ்வாறு இருக்க இங்குள்ள வளப்பற்றாக்குறை மற்றும் நோயாளர்களை வைத்தியர்கள், தாதியர்கள் அணுகும் விதம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.  யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கைக்கும் வைத்தியர், தாதியர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருப்பதை காணமுடிகிறது. நகரம், கிராமம், மக்கள் தொகை என்பவற்றிற்கு இணங்க வைத்தியர், தாதியர் நியமனங்கள் அமையப் பெறவேண்டும் என்பது பொதுவான விதியாகும்.

கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் அடிப்படையில் ஒரு தாதியருக்கான நோயாளர் விரம்

யாழ்ப்பாணம் :- 9,280
மன்னார் :- 2,948
முல்லைத்தீவு :- 11,913


ஒரு வைத்தியர்களுக்கான நோயாளர் விபரம்

யாழ்ப்பாணம் :- 23,445
மன்னார் :- 49,200
கிளிநொச்சி :- 14,032
வவுனியா :- 23,150

(அதாவது யாழ்ப்பாணத்தில் ஒரு வைத்தியர் 23,445 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளார். மேற் கூறிய தாதியர் விபரமும் அவ்வாறே.)

மேற்கூறப்பட்ட இவ்வாறான ஒரு நிலைக்கு காரணம் வடக்கில் சேவை புரிய பெரும்பான்மையானவர்களுக்கு விருப்பமில்லை என்பதாகும். மருத்துவ மாணவர் பயிற்சி நியமனத்தில் கூட பெரும்பாலானவர்கள் விரும்பி யாழ் மாவட்டத்திற்கு விண்ணப்பதில்லை. மிகக் குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களே வலுக்கட்டாயமாக யாழில் சேவையாற்றுவதற்கு பணிக்கப்படுகின்றனர். இறுதியாக அமைந்த வைத்திய மாணவர்களது பயிற்சி கூட இவ்வாறான ஒரு நிலையிலேயே அமைந்துள்ளது.


வைத்தியசாலைக்குச் செல்பவர்கள் நோயுடன் போராடி உடலளவிலும் மனதளவிலும் பலனீனமடைந்து இருப்பவர். இவ்வாறானவர்களுக்கு வைத்தியர்கள், தாதியர்கள், வைத்திய உதவியாளர்களது நடவடிக்கைகள் மேலும் நோய்த் தாக்கத்தை அதிகரித்து விடக்கூடாது. நோயாளர்களை பொறுமையுடன் பார்வையிட வேண்டும். வைத்தியரின் சிறந்த பார்வையால் மனம் திருப்திப்பட்ட நோயாளர்களுக்கு அந்த நேரமே பாதி நோய் பறந்திவிடும். சில வைத்தியர்கள், தாதியர்கள் சுடும் சொற்கள் நோயாளியை மேலும் பலவீனமடையச் செய்யும். பாலர் பாடசாலை மாணவர்களை அணுகுவதுபோல் நோயாளிகளையும் கவனிக்க வேண்டும்.

வைத்தியர்களின் கவனயீனத்தினால் நோய் தாக்கம் அதிகரித்த சந்தர்ப்பங்களும் யாழ். வைத்தியசாலை வரலாற்றில் உள்ளது. இதன் காரணமாக சிலநோயாளிகள் வாழ் முழுவதும் தமது இயல்பு நிலையை எட்ட முடியாத சந்தர்ப்பங்களும் உண்டு. நீங்களே தஞ்சம் என்று ஓடி வரும் நோயாளர்களை இப்படி அலட்சியப்படுத்துவது சரியா ?


யாழ். போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களை, 'இங்கு பார்க்க முடியாது, நீங்கள் அந்த தனியார் வைத்தியசாலைக்கு வாருங்கள்' என்று அறிவுறுத்துதல் எந்த வகையில் நியாயமாகப்படுகிறது. வறுமையில் இருக்கும் மக்கள் எவ்வாறு பெருந்தொகை பணத்தை கொடுத்து தனியார் வைத்தியசாலைகளிற்குச் செல்வர். அவ்வாறு தனியார் வைத்தியசாலைக்குச் சென்று அந்த வைத்தியரால் நோயாளரை பார்ப்பதற்கு நேரம் உள்ளதெனில் அந்த நேரத்தை, இந்த வைத்தியசாலையில் செலவளிக்க முடியாதா? வேலைக்கு உரிய நேரத்திற்கு சமூகமளித்தால், அங்கு வீணே செலவளிக்கும் நேரத்தை உபயோகப்படுத்தினால் இந்த மக்களிற்கு நீங்கள்தானே கடவுள் ஐயா!  இதை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் ?

நோயின் தாக்கத்தால் துன்பத்தில் உங்களிடம் ஓடி வந்தால், அவர்களுக்கு கிளினிக்கை ஒரு மாதம், ஆறு மாதம், ஏன் ஒரு வருடத்தின் பின்பும் வழங்கப்படுகின்றன. அத்தனை காலத்திற்கும் அந்த நோயாளி அப்படியே நோயுடன் வாழ வேண்டுமா? அதுவே தனியார் வைத்தியசாலைக்குச் சென்றால் போதனா வைத்தியசாலை வைத்தியரே உடனடியாக வைத்தியத்தை முடிக்கிறார். ஏன் இப்படி ஒரு நிலை ?  அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலைகளில் விசேட நிபுணர்கங்களிள் பார்வையிட வேண்டிய காலங்கள் குறைந்த பட்சம் மூன்று மாதங்களின் பின்னரே வழங்கப்படுகிறது. இதுவே அவர்களை தனியார் வைத்தியசாலைகளில் எனில் 3 நாட்களில் பார்க்க முடியும்.


யாழ். போதனா வைத்தியசாலையில் சேவை நோக்கத்தோடு தனது கடமை நேரத்திற்கு அதிகமாக சேவை புரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சேவையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அப்படியானவர்கள் அரிது. ஒரு பெரிய கட்டிடத்தை ஒன்று, இரண்டு தூண்களால் தாங்கிப் பிடிக்க முடியாது. அதுபோலவே தனி ஒரு இருவரின் உழைப்பால் வடமாகாண நோயாளர்களை குணப்படுத்தி விட முடியாது.

படைக்கும், அழிக்கும் தொழிலைப்புரியும் கடவுளுக்கு அடுத்த நிலையில் சில சமயம் அந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் மக்களை வைத்தியர்கள் கைவிடலாமா ?

10 comments:

  1. வாவ்வ்வ்...... எவ்ளோ தகவல் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கீங்க.... எவ்ளோ தகவல் கொட்டிக்கிடக்கு......

    ReplyDelete
  2. உண்மையிலே வருத்தத்துக்குரிய விஷயம்...

    தமிழர்களுக்கு எப்போ விடிவு காலம் வருமோ கடவுளே,......

    ReplyDelete
    Replies
    1. திடுடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, என்ற நிலைதான் இங்கு.

      நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்.

      Delete
  3. உண்மை உண்மை சகோதரி...
    மருத்துவர்களை நாம் கடவுளுக்கு அடுத்த நிலையில்
    தான் வைத்துள்ளோம்...
    சில சந்தர்ப்பங்களில் கடவுளுக்கு முன்னோடியாகவும்
    வழிபடுகிறோம்...
    இல்லாத உடம்புக்கு உயிரைக் கொடுத்தவன் கடவுள்..
    இருந்து பிரியும் உயிரை மீட்டுக்கொண்டு வருபவர் மருத்துவர்...
    செய்யும் தொழிலின் தரம் தெரிந்து அவர்களும் தங்களின் தரத்தை
    உயர்த்திக்கொள்ள வேண்டும்...
    அவர்கள் செய்யும் பணியறிந்து நாமும் அவர்களை புரிந்துகொள்ள வேண்டும்...

    புள்ளி விவரங்களுடன் மிகவும் அருமையான கட்டுரைப் பதிவு சகோதரி...

    ReplyDelete
  4. உயிருடன் இருக்கும் மக்களை மேலும் வலுவாக்குவதை விட
    உயிருக்கு போராடும் மக்களை முதலில் காப்பதே
    ஓர் அரசின் தலையாய கடமை...
    சரிவர செய்ய எந்த அரசாங்கமும் தங்கள் கடமையில் இருந்து
    காலம் தாழ்த்தவோ பின்வாங்கவோ கூடாது...

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க அண்ணா, நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்கும்.

      Delete
  5. இவர்களுக்கெல்லாம் என்றும் இது புரியப்போவதில்லை.தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்.எதற்கெடுத்தாலும் பணிப்புறக்கணிப்பு, அலட்சியப்போக்கு.உயிரின் மதிப்பை புரிந்தும் அலட்சியம் காட்டும் தன்மை.எல்லாம் பணம் செய்யும் வேலை.

    ReplyDelete
    Replies
    1. ம், தம்வீட்டில் தன் உறவுகளிற்கு என்றால் மட்டும் இவர்களுக்கு உணர்விருக்கும். மற்றும்படி இவர்கள் உணர்வற்ற ஜடம் போலும்

      Delete
  6. இந்த வைத்திய அதிகாரிகள் மீது உண்மையில் சிறையில் போடும் வண்ணம் சட்டம் இருக்க வேண்டும் அரச பணத்தில் படித்துவிட்டு மக்களை காசு புடுங்கும் மந்தைகளாக பார்க்கும் இவர்கள் வெட்கத்துக்குக்குரியவர்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா, யார் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துகிறார்கள். எல்லாரும் ஏனோதானோ என்று நடக்கிறார்கள். ஆனால் வைத்தியர்கள் அலட்சியமாக நடப்பது பெரிய பாதிப்பு.

      நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்

      Delete